கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த 12 மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி இன்று விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியதுடன், பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை முறையே 8.5% மற்றும் 9.5% ஆக 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
நாட்டின் உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு
சமீபத்திய மத்திய வங்கி அறிக்கைகளின் படி, பெப்ரவரி 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டுப் பணம் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், அந்த 2 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 687 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
மேலும், 2024ல் இதுவரை டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 6.7% அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் பணவீக்க விகிதம் 4% முதல் 5% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு அடைந்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை முறையே 8.5% மற்றும் 9.5% ஆக 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.