இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று, 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருந்தது.
இந்தத் தாக்குதல்களில் சுமார் 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 400க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்று 5 வருடங்கள் முடிவடைய உள்ளது. இருப்பினும் இதுவரையில் இச்சம்பவத்தை யார் நடத்தியது என்பது மர்மமாகவே இருந்து வருகின்றது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் தெரிவித்த தகவல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானவொரு சூழலில் இன்னொரு தாக்குதல் இடம்பெறாமல் இருக்க பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நாட்களில் தேவாலயத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களது பொதிகளை சோதனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது குறித்து தேவாலயங்களுக்கு பொறுப்பான அருட்தந்தைகளுடன் கலந்துரையாடி இதனை நடைமுறைப்படுத்துமாறு சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.