கொழும்பில் இருந்து பஸ்ஸொன்றில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக மொனராகலையில் காத்திருந்த பெண்ணொருவரை, கெப்ரக வாகனத்தில் ஏற்றிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் , அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் சந்தேகநபர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து மொனராகலை தொம்பஹாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
உதவுவதாக கூறி பாலியல் துஸ்பிரயோகம்
பாதிக்கப்பட்ட 36 வயதான பெண், கொழும்பில் இருந்து பஸ்ஸில் அனுப்பப்பட்ட பொதியை பெற்றுக்கொள்வதற்காக இரவு 9 மணியளவில் வீதியில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அப்பெண்ணுக்கு அருகில் கெப்ரக வாகனமொன்று வந்து நின்றுள்ளது. அந்த கெப்ரக வாகனத்தின் சாரதி, எங்கே போகின்றீர்கள் என அப்பெண்ணிடம் வினவியுள்ளார்.
தொம்பஹாவெல நகருக்குச் செல்வதாக அப்பெண் பதிலளிக்கவே, தானும் நகருக்குத்தான் செல்கின்றேன் எனக்கூறி, அப்பெண்ணை வாகனத்தின் முன்பக்க இருக்கையில் ஏற்றிக்கொண்டுள்ளார். வாகனத்தை நகரத்தில் நிறுத்தாமல், கொஞ்சம் முன்சென்று, பாழடைந்த குறுக்கு வீதியில் நிறுத்தி,அப்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
அதன்பின்னர், அதே கெப்ரக வாகனத்தில் அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு நகரத்துக்கு வந்து இறக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் அபகரித்துச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, கெப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.