யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் இன்றையதினம்(12) கண்டன போராட்டமொன்று இடம்பெற்றது.
தீவக பகுதி தெற்கு வேலணை பிரதேச கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில், யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் கையளித்ததுடன் கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
குறித்த கண்டனப் போராட்டத்தில் அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே இந்திய அரசே தமிழக ரோலரை தடுத்து நிறுத்து தொப்புள் கொடி உறவே நமது கடல் வளத்தை அழிக்காதே என்ற வாசகங்களை ஏந்தியவாறு கண்டன போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தீவகம் தெற்கு கூட்டுறவு சமாசங்களின் தலைவர் ஆறுமுகம் கனகசபை , யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் , யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் மற்றும் யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் உப தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்சிஸ் ரட்னகுமார் உள்ளிட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்திய துணைத் தூதரகத்தில் கையளிக்கப்பட்ட குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டதாவது குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்தியா அரச உயர் மட்டம் வரை மகஜர்களை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும் மேற்கொண்டோம்.
ஆனால், எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர் மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை.
ஆகவே, எமது கோரிக்கை அடங்கிய மகஜரை நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் வழங்கியுள்ளோம்.
எமது மகஜருக்கான பதிலை இம் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
அவ்வாறு எமக்கான பதிலை வழங்காவிடில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக திட்டமிட்டுள்ளோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.