சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது.
இதன்போது அனைவரது நெஞ்சையும் கனக்க வைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்” என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆராத்தி எடுத்து வரவேற்றார்.
இதன்போது கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில் ஒம் நமசிவாய சொல்லி ஆராத்தி எடுக்கப்பட்டது.
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வவுனியாவில் இன்று காலை 8.00 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி, ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த (28.02.2024)ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.