தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைப்பதாக யாராவது கூறினால் வரி விதிக்காமல் அரச சேவைகளை எப்படி வழங்கத் திட்டமிடுகிறார்கள். அந்த நேரத்தில் தங்கள் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து அரசாங்கத்தை கொண்டு செல்வார்களா என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்நாட்களில் வீடுகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை விற்க அவர்கள் திட்டமிட்டு இருந்தாலே தவிர வரியின்றி அரசாங்கத்தை நடத்துவதற்கு போதுமான நிதியை பெற்றுக்கொள்வது சவால் மிக்க தாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வரி அதிகரிப்பு
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக வரி அதிகரிப்புகள் தயக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் அரசாங்கத்தாலும் ஜனாதிபதியாலும் இந் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையானது விருந்தோம்பல் மற்றும் நன்கொடைகளை வழங்குவதற்கு பிரபலமானதாக விளங்குகிறது. எமது தேசம் வரலாற்றைக் கொண்ட ஒரு தேசமாக இருந்தாலும், வரி செலுத்துவது நாட்டில் குறிப்பிடத்தக்க பிரச்சினையாக மாறியுள்ளது.
இலவச சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இலவசக் கல்வி ஆகியவற்றுக்கான நிதியைப் பெறவே வரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று சிலர் வரி விதிப்பதை எதிர்க்கின்றனர். நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக வரிகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. எனவே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைப்பதாக யாராவது கூறினால் வரி விதிக்காமல் அரச சேவைகளை எப்படி வழங்கத் திட்டமிடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
அந்த நேரத்தில் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் இந்த சேவைகளுக்கு நிதியளிப்பார்களா? ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் வரிகளை அதிகரிப்பது எமக்கு மிகவும் பாதகமான விடயமாகும், வரியை உயர்த்தும்போது, அரசு அதிகாரிகள் உட்பட வரி செலுத்த வேண்டிய மக்கள் அனைவரும் எம் மீது கொந்தளிக்கின்றனர்.
நாட்டை வீழ்ச்சியடைந்த இடத்திலிருந்து முன்னேற்றுவது
எவ்வாறாயினும், இந்த நாடு மீண்டும் துண்டாடுவதைத் தடுப்பதற்காகவே இக்கடினமான தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
கடந்த மாதம் அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரித்து 300 பில்லியன் ரூபாய் உபரியாக உள்ளது. 300 பில்லியன் ரூபா உபரியான பணத்தை ஜனாதிபதி நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்து கையிருப்பில் வைத்திருப்பதைத் தேர்ந்தெடுத்தார் எதிர்வரும் மாதங்களில் 100-150 பில்லியன் கையிருப்பை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கைத் தலைவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த தலைவர்களை விமர்சிப்பவர்கள் முன்பு அவர்களின் ஆதரவாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் நாம் விரும்புவது நாட்டை வீழ்ச்சியடைந்த இடத்திலிருந்து முன்னேற்றுவதுதான்.
நாம் அனைவரும் மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் அப்போதுதான் எமது நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும் என குறிப்பிட்டார்.