வெயில் காலத்தில் சூட்டை குறைக்கும் உணவுகள்!

தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப பருவ மாற்றமும், அதற்கேற்ப உடல் மாற்றங்களும் நிகழ்வது இயல்புதான்.

கோடை காலத்தில் இது போன்ற மாற்றங்கள் அதிகம் ஏற்படுகின்றன. கோடையில் வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் பல்வேறு உபாதைகளும் உண்டாகின்றன. கோடை வெயில் சுட்டெரிக்கிறது.

வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது.

சில நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வியர்வை கொட்டுகிறது. இதனால் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் பல நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே, கோடை காலத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது எமது கடமையாகும். கோடைக் காலத்தில் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்த்து, உடலுக்கு சக்தி தரும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே கோடை காலத்தில் எந்த உணவுகள் உண்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம் என பார்க்கலாம்.

கோடைக் காலங்களில் கண்டிப்பாக நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர்

தண்ணீர் குடிக்கும் ஒரு நல்ல பழக்கம் இன்று பலருக்கும் இருப்பதில்லை.

ஆனால் கோடைக் காலத்தில் கட்டாயப்படுத்திக்கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். கோடைக் காலத்தில் குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடலில் நீரேற்றத்தை இது தக்கவைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். இளநீர்: வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் சிறுநீர் கடுப்பு உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்படுவோரும் இளநீர் அருந்தவேண்டும். உடல் சூட்டைத் தணிப்பதில் இளநீருக்குத் தான் முதலிடம்.

எலுமிச்சைச் சாறு

குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பானம். உடல் உஷ்ணத்தைக் குறைக்க எலுமிச்சை சாறில் சிறிது உப்பும் கலந்து அருந்த வேண்டும். தாகத்தையும் குறைக்கும் என்பதால் தினமும் அருந்தலாம்.

மோர்

இதுவும் எளிமையாகக் கிடைக்கும் பானம் என்பதாலும் கால்சியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்திருப்பதாலும் தினமும் ஒரு டம்ளர் மோர் அருந்தலாம்.

பழங்கள் கோடைக் காலத்திற்கென்று சீசன் பழங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. தர்பூசணி, கிர்ணி பழங்களை அப்படியே சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் இதனை சாப்பிடலாம். பழங்களை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் பழச்சாறுகளாக அருந்தலாம்.

காய்கறிகள் கோடையில் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், சௌசௌ, பூசணிக்காய், பரங்கிக்காய், கோவா, கரட், போஞ்சிஆகியவற்றைச் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

சீரகம், வெந்தயம்

வெயில் காலத்தில் சாதாரண தண்ணீருக்குப் பதிலாக சீரகம் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம் அல்லது வெந்தயம் ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.