யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் நியமன விவகாரத்தில் பழைய மாணவன் என்ற ரீதியில் கல்லூரிக்கு தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என அமைச்சரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு சபையின் புலமைப் பரிசில் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மத்திய கல்லூரியை வழிநடத்திய அமரர் இராசதுரை கடும் அச்சுறுத்தல் இருந்த காலத்தில் யாழ் மத்திய கல்லூரியை எவ்வாறு வழிநடத்தியவர் என பலருக்கு தெரியும் துரதிஷ்டவசமாக அவரது உயிர் பறிக்கப்பட்டுவிட்டது.
தற்போது யாழ் மத்திய கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறுகின்றீர்கள் ஏதாவதொரு பிரச்சினை அரசியல் தலையீடு இல்லாமல் எங்காவது தீர்க்கப்படுகிறதா என நீங்கள் கூறுங்கள் பார்க்கலாம்.
பழைய மாணவன் என்ற ரீதியில் மத்திய கல்லூரி அதிபர் விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டிய தேவை எனக்கு இல்லை .
ஆனால் பழைய மாணவன் என்ற ரீதியில் கல்லூரிக்கு தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
எனவே மத்திய கல்லூரி விடையத்தில் யார் கல்லூரியை முன்னோக்கி கொண்டு செல்வார் என கருதுகிறேனோ அவர் பக்கமே நான் நிற்பேன் என தெரிவித்த அமைச்சர் அரசியல் எனக் கூறுபவர்கள் கூறிவிட்டு செல்லட்டும் எனவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.