மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோயிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று திருப்பூரில் நிறைவு பெற்றது. அண்ணாமலை பாத யாத்திரை நிறைவு விழா திருப்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருப்பூரின் பல்லடம் மாதப்பூர் அருகே பிரமாண்டமாக நடைபெற்ற நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜகவினர் திரண்டதாக அக்கட்சியினர் கூறினர். பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகள் குறித்து பேசினார். மேலும் திமுகவையும் சரமாரியாக விமர்சித்தார். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரை புகழ்ந்தும் பேசினார்.
திருப்பூர் கூட்டம் முடிந்த பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்க்கு வந்தார். மதுரை வீரபாஞ்சானில் உள்ள டி.வி.எஸ். பள்ளியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மோட்டார் டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு கார் மூலம் மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு காரில் பிரதமர் மோடி சென்றார். அங்கு சிறிதுநேரம் ஓய்வு எடுத்த பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். சுமார் 1 மணி நேரம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மனமுருகி சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இதனிடையே, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கோயிலில் சாமி தரிசனம் செய்ததை பாக்கியமாக உணர்வதாக பதிவிட்டுள்ளர்.
மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.