மாதகல் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மாதகல் – சம்பில்துறை விகாரையை சூழவுள்ள கடற்பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையை முன்னெடுக்க இலங்கை கடற்படையினர் தடைவிதித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர்க்காலத்தில் எங்கள் கடற்பரப்பில் நாங்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இலங்கை கடற்படையால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இனப் பாகுபாடு
இன்று போர் முடிந்து விட்டது. சிவில் நிர்வாகம் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகின்ற சூழலில் கடற்படையினர், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் விவகாரத்தில் தலையிடுகின்றனர்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகியுள்ள காலத்தில், கடற்படையினரின் சிவில் நிர்வாகத்தின் மீதான தலையீடு கண்டிக்கப்பட வேண்டும்.
தென்னிலங்கையில் பல இடங்களில் விகாரைகளை சூழவுள்ள கடற்பரப்புகளில் கடற்றொழிலில் இடம்பெறுகின்றது.
அவையொன்றும் விகாரையின் அழகை கெடுக்கவில்லையா? தமிழர்கள் என்பதற்காகவே எங்கள் மீது எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான பாகுபாடுகளை மேற்கொள்ளப்போகின்றீர்கள்? விகாரைக்கு அண்மையாக மீனைக் கொல்லுவதாகக் கடற்படையினர் கூறுகின்றனர்.
வாழ்வாதாரத்தைக் கெடுத்து – பட்டினிபோட்டு எங்களைக் கொல்லச் சொல்லியா உங்கள் புத்தர் பெருமான் உபதேசித்திருக்கின்றார்? சம்பில்துறையில் தலைமுறைகளாக எமது மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடற்றொழிலுக்கு தடை
எப்போதும் இல்லாது திடீரென கடற்படையினர் அந்தப் பகுதியில் கடற்றொழிலை முன்னெடுக்க தடை விதிப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
ஏற்கனவே அந்த விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதிகளை அமைத்து அங்கு சிங்களவர்களை தங்க வைக்கின்றனர்.
இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாத – கையாலாகத கடற்படையினர் எங்கள் மக்களிடம் மாத்திரம் தங்கள் வீரத்தை காட்டுகின்றனர்.
நீங்கள் எங்கள் வயிற்றிலடிப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கவேண்டும். அமைதியை விரும்பும் எங்கள் மக்களை வலிந்து சீண்டுகின்றீர்கள்.
இதற்கான விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கை கடற்படையை எச்சரிக்க விரும்புகின்றேன். என்றுள்ளது.