இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் இந்திய கடற்றொழிலாளர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டமானது, இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு (24.02.2024) முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது, இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 5 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்
மேலும், சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று பத்தாவது நாளாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடற்றொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சி மடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்றொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இரவு பகலாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.