யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், NORTHERNUNIஇன் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரசிகர்களில் தாம் செலுத்திய பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் 0777315262 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், இந்திரகுமார் பத்மநாதன் ஆகிய நான் எனது பெரும்பாலான காலப்பகுதியை கனடாவிலே கழித்தது அனைவரும் அறிவீர்கள். எனினும் எனது தாய் மண்ணிற்கும் என் அருமை மக்களுக்கும் எவ்விதத்திலாவது நன்மை புரிய வேண்டும் என்பது எனது நெடுங்காலக் கனவு.
கல்வி வளர்ச்சி
நிதி உதவியோ, பொருள் உதவியோ என்பது சிறிது காலத்திற்கே பயனளிக்கக்கூடியது. என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் அதுவே என் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.
எமது மக்களுக்கு குறிப்பாக எம் இளைய தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நோக்கிலே அமைக்கப்பட்டது NORTHERNUNI ஆகும். எவ்வித சுயலாபத்திற்காகவும் அமைக்கப்பட்டது அல்ல. மற்றும் பட்டப்படிப்பின் பின்னரான தொழில்வாய்ப்புகளுக்காகவும் எம் சமூக இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் அமைக்கப்பட்டதே MAGICK TECH நிறுவனம் ஆகும்.
அத்துடன் நின்றுவிடாது பொழுதுபோக்கிலும் அவர்களை மகிழ்விக்க எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டதே ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம். முன்னதாக முழுவதுமே இலவச நுழைவு என அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஆசன பகுதியில் தமக்கும் இடம் வேண்டும் என வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் எம்மை தொடர்பு கொண்டதுடன் பணம் செலுத்தி டிக்கட்டினைப் பெறுவதற்கும் தயாராக இருந்தனர்.
இதனை நோக்குகையில் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று பலர் நின்று பார்க்கும் போது சிலர் மட்டும் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று ஆசனங்களைப் பெறுவதைத் தவிர்க்கும் முகமாக ஆசனங்களை பகுதி பகுதியாக பிரித்து குறிப்பிட்ட தொகைகளுக்கு கேட்பவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருத்தாலும் டிக்கட் நுகர்வினை கட்டுப்படுத்தும் நோக்குடனே விலைகள் நிர்ணயிக்கப்பட்டது.