இலங்கையில் கடந்த 2023ஆம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10 ஆயிரம் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவிக்கையில், 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலத்தில் 9,434 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.
சட்டங்களில் திருத்தம்
அவற்றில் குறிப்பாக, 2,242 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 472 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. 404 முறைப்பாடுகள் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை.
51 முறைப்பாடுகள் சிறுமிகள் மீதான வன்முறைகள் தொடர்பானவை. 6 முறைப்பாடுகள் சிறுவர்களை ஆபாசத்துக்கு பயன்படுத்தியமை தொடர்பானவை என கூறினார்.
இவை தவிர, சிறுவர்களை போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துதல், தொழில்களுக்கு அமர்த்துதல், குடும்ப வன்முறையை பிரயோகித்து துன்புறுத்தல், புறக்கணித்தல், கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வியை பெற்றுத் தராதிருத்தல் போன்றவை தொடர்பிலும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த 2022இல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 7,466 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உரிய திணைக்களங்களுக்கு இந்த முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க தற்போது காணப்படும் சில சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் கூறினார்.