எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
காணி உரிமையற்ற இருபது லட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் காணிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நாட்டில் காணிகளுக்கு நிலவி வரும் செயற்கை விலை அதிகரிப்பு குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டு வாடகை குறையும்…
எதிர்காலத்தில் காணி விலை, கடை வாடகை, வீட்டு வாடகை என்பன குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காணி வளத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கில் அரசாங்க காணிகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காணி உரிமையற்ற மக்களுக்கு கடந்த அரசாங்கங்கள் எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதில் சிரத்தை காட்டி, 20 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
காணி உரிமையாளர்கள் அவற்றை விற்பனை செய்யவோ குத்தகைக்கு வழங்கவோ முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமாக பாரியளவு காணிகள் காணப்படுவதாகவும் அந்தக் காணிகளை ஹோட்டல் போன்றவற்றை நிர்மானிப்பதற்கு குத்தகை அடிப்படையில் வழங்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.