நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தை விட நடப்பாண்டின் ஜனவரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் 28 நாட்களில் மட்டும் 189,574 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 6,770, அளவில் பதிவாகியுள்ளது.

அதன் பிரகாரம், ஜனவரி இறுதிக்குள் சுமார் 210,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கடந்த டிசம்பரில், 210,351 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில் இம்மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சற்று வீழ்ச்சி ஏற்படக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதுவரையிலான புள்ளிவிவரங்களின்படி, இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவர்கள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர். அதற்கடுத்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் குழு ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் நடப்பு ஆண்டில் இலங்கை வந்துள்ளனர்.