இந்த வருடம் மார்ச் மாதம் வரையான ஐயாயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவுக்கான நிலுவை தொகை அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் 7800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கவும், ஏப்ரல் முதல் அதிகரிப்பை வழங்கவும் முன்மொழியப்பட்ட போதிலும், இம்மாதம் முதல் மார்ச் வரையில் அந்த தொகையில் ஐம்பது சதவீதத்தை வழங்குவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
கொடுப்பனவு அதிகரிப்பு
அதன்படி, இம்மாதம் முதல் மார்ச் வரை தலா ஐந்தாயிரம் ரூபாவும், மீதமுள்ள தொகை அடுத்த ஆண்டும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 7800 ரூபாவுடன் ஐயாயிரம் ரூபாவை சேர்த்து எதிர்வரும் மார்ச் மாதம் வரை பன்னிரண்டாயிரத்து எண்ணூறு ரூபாவை (12800) செலுத்துமாறும் ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவை பதினேழாயிரத்து எண்ணூறு ரூபாவாக அதிகரிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, சாதாரண மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு வேலை நாட்களின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.