நாட்டு மக்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்!

நாட்டு மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் 12 சதவீத வட்டியில் வீடுகளை வழங்கும் சமத நிவாஹன வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டின் பின்னர் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் வேகமாக அதிகரித்துள்ளன. அந்த வட்டி விகிதங்கள் 20 சதவீதத்தை தாண்டியுள்ளன.

“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் முதலில் 15,000 புதிய வீடுகளுக்கான கடன் வழங்கப்படும்.

கடன் தொகை

“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு தொகுதியில் 100 விண்ணப்பதாரர்கள் வீடு புனரமைப்பதற்கு அல்லது புதிய வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என அவர் தெரிவித்தார்.

ஆனால் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான கடன் தொகையை கூட விசேட அனுமதிகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் வழங்கும் அடிப்படை பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வீட்டுக்கடன் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வீட்டுக்கடன்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பதாரர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கப்படுவதால் விரைவாக கடன் வசதிகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீடமைப்பு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 7,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.