நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய ‘ஸ்லிம்’ எனும் லேண்டர் விண்கலம், நிலவில் தரையிறங்கியதாக, ஜப்பான்விண்வெளி மையம் நேற்று அறிவித்தது.
நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ‘ஸ்லிம்’ எனும் லேண்டர் விண்கலத்தை ஏவியது.
நான்கு மாதங்களுக்கு மேலாக பயணித்த இந்த விண்கலம், இந்திய நேரப்படி நேற்று இரவு 8:50 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
700 கிலோ மட்டுமே எடை உடைய இந்த விண்கலம், துல்லிய தரையிறக்கம் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலவில் தரையிறங்கி உள்ளது.
இதுவரை நிலவில் தரையிறங்கிய விண்கலன்கள் 10 கி.மீ., அகல பரப்பில் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்கும் படி வடிவமைக்கப்பட்டவை.
‘ஸ்லிம்’ லேண்டரில் உள்ள துல்லிய தரையிறக்க தொழில்நுட்பம், 330 அடி சுற்றளவுக்குள் லேண்டரை தரையிறக்கி உள்ளது.
இதன் வாயிலாக நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து ஜப்பானும் இணைந்துள்ளது.