மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை அடைத்து வைத்து நாய்களை வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படும் இராணுவ சிப்பாயின் மனைவி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் மொரந்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மின்சார சபை ஊழியர்களிடம் வாக்குவாதம்
இராணுவ சிப்பாயின் மனைவி மற்றும் தாய் ஒன்றாக வசித்து வருவதுடன் அவர்களது வீட்டிற்கு அருகிலேயே இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரியின் வீடும் அமைந்துள்ளநிலையில், இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி ஜப்பான் நாட்டில் வசிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டில் வசிக்கும் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரியின் வீட்டு மின்சாரத்தை துண்டிப்பதற்காக 4 மின்சார சபை ஊழியர்கள் வந்துள்ளனர்.
இதன்போது தாய் மின்சார சபை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து இரு ஊழியர்கள் மாத்திரமே வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றைய ஊழியர்கள் அவர்கள் பயணித்த வாகனத்தில் இருந்துள்ளனர்.
வீட்டிற்குள் வந்த ஊழியர்கள் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி வீட்டு மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனையடுத்து இராணுவ சிப்பாயின் மனைவி தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
அதோடு இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி இணையவழி மூலமாக ஏற்கனமே மின்சார கட்டணத்தை செலுத்தி விட்டதாக கூறி கட்டண சீட்டின் புகைப்படத்தை கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் இராணுவ சிப்பாயின் மனைவி ஊழியர்களிடம் கூறியபோது அதனை அவர்கள் செவி மடுக்காததால், கோபமடைந்த இராணுவ சிப்பாயின் மனைவி ஊழியர்களை அடைத்து வைத்து துண்டித்த மின்சார இணைப்பை மீண்டும் வழங்குமாறும் இல்லையெனில் நாய்களை வைத்து கடிக்க செய்வதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.