அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் மாணவர்கள் எனவும் பாடசாலை நிர்வாகி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
டிலான் பட்லர் என்ற 17 வயதுடைய உயர்நிலைப் பாடசாலை மாணவரே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்திற்கு பின்னர், இவர் தன்னை தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்லர், சிறிய அளவிலான கை துப்பாக்கி மற்றும் பம்ப் ஆக்சன் துப்பாக்கியை தாக்குதலுக்கு வைத்திருந்ததாகவும், வெடிக்கும் பொருள் ஒன்றும் பாடசாலையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன் துப்பாக்கி சூடு சம்பவம் நேர்ந்ததால், அதிகப்படியான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலையில் இருக்கவில்லை.
துப்பாக்கி சூட்டை நடத்தும் முன் பட்லர், பாடசாலையின் கழிப்பறையில் இருந்தபடி “இப்போது நாம் காத்திருக்கிறோம்” என்ற தலைப்பிடப்பட்ட வீடியோ ஒன்றை டிக் டொக்கில் பதிவேற்றி இருந்தார்.