வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, நுவரெலியா மற்றும் ஜா அல பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த சில தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு வாழ்க்கை
கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சொகுசு வாகனங்களை பயன்படுத்தி மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இவர், அவ்வாறே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கரை வருடங்களாக விளக்கமறியலில் இருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகள்
இவர் கைது செய்யப்பட்ட போது, 06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் சொகுசு கார் ஒன்று கட்டுநாயக்க பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்