மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையகத்திற்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கத்தில் இன்று மாலை வீடு ஒன்று இளைஞர்களினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன.
திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் 01ஆம் குறுக்கு வீதியில் வீடு ஒன்றினை இளைஞர் ஒருவர் வாடகைக்குப் பெற்று வசித்து வந்த நிலையில் அவரின் செயற்பாடுகளை அப்பகுதி இளைஞர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த வீட்டினை இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன் இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அங்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எம்.விவேகானந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக பெறுமதி கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை மீட்டதுடன் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது அங்கு போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருந்த இரண்டு பெண்களும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.