காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில கைதிகள் பதிவான மாத்தறை சிறைச்சாலையின் நிலைமை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
17 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியதையடுத்து, சிறையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 48 மணித்தியாலங்களில் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை எனவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“தற்போது மாத்தறை சிறைச்சாலையின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. நேற்றைய தினம் நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை. இதுவரை 17 நோயாளர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இரு நோயாளிகளும், 14 நோயாளிகள் சாதாரண வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும், சிறைச்சாலையின் சுகாதாரத் துறை மற்றும் பிரதேச சுகாதார பிரிவும் இணைந்து சிறையில் உள்ள நோயாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்” என்றார்.