உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், பிரதான நத்தார் ஆராதனை நேற்று இரவு 11.45 அளவில் கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் இடம்பெற்றது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நடைபெற்றது.
அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு நத்தார் தின ஆராதனைகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், நேற்று இரவு வத்திக்கான் புனித பசிலிக்காவில் பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, பல்வேறு சவால்கள் முன்நிற்கின்ற தருணத்தில் கொண்டாடப்படும் இந்த நத்தார் பண்டிகையைக் நாட்டிலுள்ள சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது நத்தார் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள் என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாதெனவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இயேசு கிறிஸ்து இருள் சூழ்ந்த இதயங்களுக்கு நித்திய ஒளியை தந்தார் உலகிற்கு பகிர்தல் என்ற தலைச்சிறந்த பாடத்தை கற்றுத்தந்தார் நத்தார் பண்டிகையை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் பேதமின்றி கொண்டாடுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதியை கொண்டுவருவதே நத்தார் பண்டிகையின் நோக்கம் எனவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எம்மிடம் இருந்து விலகி நாம் அனைவரும் மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் வாழ இறைவன் எங்களுக்கு அருள வேண்டும் என தமது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.