2020 ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் தற்போது வரை 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இதில் எத்தனை பேர் ஜேஎன் 1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனவும் மாநிலத்தில் அதிகளவில் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கடந்த சில வாரங்களாக கேரளா மாநிலத்தில் இருந்து கொவிட்-19 பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் (ஐஎல்ஐ) பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் அதிகளவில் சோதனைகளுக்கு அனுப்பப்படுவதன் மூலம் இது தெரிய வருகிறது” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பால் கூறினார்.
இதற்கு முன்பாக ஜேஎன் 1 வகை கொரோனா அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய வகை கொரோனா விரைவாக அல்லது திறம்பட பரவ இந்த மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. அப்படி மாற்றம் பெற்றதுதான் ஜேஎன்1. “ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மற்ற வகை கொரோனா வைரஸ்களுடன் புதிய வகை கொரோனாவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம்” என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சி.டி.சி (Centres for Disease Control and Prevention) கூறுகிறது.
ஜேஎன் 1 கொரோனா நோயின் அறிகுறிகள் குறித்து நுரையீரல் நிபுணர் சி. பாஸ்கர கருத்து தெரிவித்துள்ளார்.
“நோய் தொற்று உள்ளவர்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடுமையான இருமல் மற்றும் சோர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் காய்ச்சலில் தான் முதலில் தொடங்குகின்றன. இது நிமோனியா போன்ற நோய்களுக்கான அறிகுறிகளுக்கு நெருக்கமாக இருப்பதால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது,” என்றார்.
இந்த அறிகுறிகள் முழுமையாக குறைய இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் என்றும் அவர் கூறினார். “முழுமையான படுக்கை ஓய்வு எடுப்பதன் மூலம் இதிலிருந்து விரைவில் மீண்டு வரலாம். கொவிட்-19 இன் இரண்டாவது அலை போல இது ஆபத்தானது அல்ல. சில முன்னெச்சரிக்கைகள் மூலம், JN1 ஐத் தவிர்க்கலாம்,”என்றார் பாஸ்கர பாபு.
“அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து மக்களும் மாஸ்க் அணிவதன் மூலம் இந்த நோயில் இருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். குளிர்ந்த உணவுப்பண்டங்களை சாப்பிடக் கூடாது. சிகரெட் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இருமும்போது கண்டிப்பாக கை மற்றும் கைக்குட்டையை மூடிக்கொள்ள வேண்டும்.’’ என்றார் அவர்.
ஜேஎன்1 தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் நான்கைந்து நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டு, முழு ஓய்வு எடுத்தால் அதிலிருந்து விடுபடலாம் என்றார் பாஸ்கரபாபு.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளும் ஜேஎன் 1 கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. எனினும் புதிய வகை வைரஸ்களை ஏற்கெனவே இருக்கும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.