சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பாடசாலைகள் இன்று (19.12.2023) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
பல குடும்பங்கள் பாதிப்பு
மழையினால் அந்தந்த மாகாணங்களில் வசிக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பல அரச பாடசாலை கட்டடங்களில் நலன்புரி முகாம்கள் நடைபெற்று வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வடக்கில் தற்போது இயங்கிவரும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 பாடசாலைகளினதும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 பாடசாலைகளினதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றைய தினம் (19.12.2023) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1039 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள்
இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலிலேயே குறித்த 8 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.