புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கலந்துரையாடல்களுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். எம்முடன் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விருப்பமில்லை என்றால் அவர்கள் தாராளமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கு உதவிகளை கணிசமாகச் செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையின் உள்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் தீர்வினை எட்டுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்கள். அதற்காக அவர்கள் கடந்த தேர்தல்களில் ஆணையும் வழங்கியுள்ளார்கள்.
நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி
அவ்வாறான நிலையில், தனிநாட்டுக் கோரிக்கை அல்லது தாயக தேசக் கோரிக்கையானது வெறுமனே ஒருசில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காக காலத்தினைக் கடத்தும் செயற்பாடாகவே அமையவுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். அதிகாரப்பகிர்வினைக் கோருகின்றார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளது.
எனினும், நடைமுறைச் சாத்தியமான வகையிலான கோரிக்கைகள் பற்றியே சிந்தித்து கலந்துரையாட வேண்டியுள்ளது. அந்த வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதை நோக்கிய செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.
அதுமட்டுமன்றி, தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் அதேநேரம் அதற்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையில் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கம் தடையாக இருக்காது
ஆகவே, புலம்பெயர் தேசங்களில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள் உள்நாட்டு யதார்த்த நிலைமைகளை புரிந்து கொள்ளாது அவர்கள் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவறாக வழிநடத்துவது பொருத்தமற்ற அணுகுமுறையாகும்.
இதனால், வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் எந்தவிதமான நன்மைகளையும் அடையப்போவதில்லை. மாறாக, புலம்பெயர் தேச தமிழ் அமைப்புக்கள் மட்டுமே தமது நலன்களை அடைவார்கள்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கலந்துரையாடல்களுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம்.
எம்முடன் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விருப்பமில்லை என்றால் அவர்கள் தாராளமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கு உதவிகளை கணிசமாகச் செய்ய முடியும். அதன் மூலம் அம்மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும். அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தடையாக இருக்கப்போவதில்லை.
மேலும் அரசாங்கமும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இதுகால வரையிலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அதற்கான விசேட அறிவிப்புக்கள் காணப்படுகின்றமை சான்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.