யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை (04) தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார்.
தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனனின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.
6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹையஸ் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த ரயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.