கற்பிட்டி – கீரிமுந்தல் களப்பு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் கீரிமுந்தல் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான 8 மூட்டைகள் காணப்பட்டுள்ளதுடன், அந்த மூட்டைகளை சோதனையிட்ட போது அதில் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
குறித்த எட்டு மூட்டைகளில் இருந்து ஈரமான எடையுடன் 465 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 465 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மூன்று மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.