இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டித் ஆரம்பமாகியுள்ளது.
அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர் மாவை சேனாதிராஜா வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியிலிருந்து விலகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையால் இப்போட்டி நிலைமை உருவாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு கட்சி யாப்பிற்கேற்ப எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அந்த கட்சியின் மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தலைவராக தேர்வு செய்ய எண்ணுபவரை கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள் 6 பேரிற்கு குறையாதோர் ஒப்பமிட்டு முற்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.
இதனால் தேர்வாக விரும்புபவர்களின் பெயரை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்குமாறு சகல தொகுதிக் கிளைகளிற்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டிற்கு அமைய தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை பரிந்துரைத்து 12 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட விண்ணப்பம் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியரிங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மற்றுமோர் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரனின் பெயரை பரிந்துரைத்து 6 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்கள்
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பெயரை வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிதன் உள்ளிட்ட ஆறுபேர முன்மொழிந்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை கட்சியின் சிரேஸ்ட உப.தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம், மன்னாரைச் சேர்ந்த தி.பரஞ்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறல், குமாரசாமி, திருகோணமலையைச் சேர்ந்த ஜேம்ஸ் சமத்தர், கொழும்புக் கிளையைச் சேர்ந்த இரட்ணவடிவேல் உட்பட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை முன்மொழிந்துள்ள 12 பேரில் வடக்கு கிழக்கு மாவட்டத்தின் 8 மாவட்டங்களுடன் கொழும்புக் கிளையைச் சேர்ந்த ஒருவரும் ஒப்பமிட்டுள்ளார்.
கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் சம்பந்தர், மாவை சேனாதிராஜா ஆகியோர் வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியிலிருந்து விலகக்கூடிய சூழலில், அடுத்த தலைமுறை தலைவர்கள் கட்சியை பொறுப்பேற்று எதிர்காலத்திற்கு வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.
தற்போது தலைவர் பதவிக்கு விண்ணப்பித்த இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.