இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறான கொடுப்பனவு வழங்கப்படாவிடின் அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க நேரிடும் என அனைத்து தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
“இந்த கோரிக்கைகளுக்கு செவி சாயுங்கள். இல்லை என்றால் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தின் முன் வருவோம். நாட்டில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுவோம்.”
இதேவேளை, இலங்கையில் மிகவும் ஆதரவற்றவர்களாக தோட்டத் தொழிலாளர்கள் உள்ளதாக இலங்கை பெருந்தோட்ட சேவைகள் சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ்.சந்திரன் தெரிவித்தார்.
குறைந்தபட்ச கொடுப்பனவாக 2000 ரூபாவை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, 20,000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (10) பத்தரமுல்லை செத்சிரிபாயவுக்கு முன்பாக வர்த்தக சங்கங்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தொழில் வல்லுனர்களின் பொறுமையை கோழைத்தனமாக கருதாமல் நியாயமற்ற வரிக் கொள்கையை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வல்லுநர்களின் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கம் மற்றும் நிதியமைச்சின் செயலாளருக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.