பலஸ்தீன காஸா மக்களுக்கெதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் உயிரிழப்பு மற்றும் சொத்தழிவுகளை சந்தித்து வரும் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்திலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல்களிலிருந்தும் ஊர்வலமாக வந்த பொது மக்கள் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பள்ளிவாயல்களின் நிருவாக சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முகவரியிடப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீனிடம் உலமா சபையின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.