அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் எரிபொருள் பௌசர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) இரவு 7.00 மணியளவில் தலாவ நகரின் மையப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தலாவ கரகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய டபிள்யூ. நிசல்யா நெத்சரணி விமலசேன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
இவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருந்த மாணவி எனவும் தெரியவந்துள்ளது.
கொழும்பு சபுகஸ்கந்த பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று தலாவ நகர சுற்றுவட்டத்தில் தெற்கிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த சிறுமியும் அவரது தாயும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் பௌசரில் மோதியதும், குறித்த சிறுமி பௌசர் வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இருவரும் தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிறுமி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், தற்போது அவர் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் பௌசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தலாவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.