நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, இன்று (29) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மி.மீ. 50க்கு மேல் ஓரளவு கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 40-45 கி.மீ. வரை காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களின் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.