அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,
“கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் நம்நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நோய்த் தொற்று நிலைமையும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி குறைந்ததன் விளைவாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறைந்தது.
சுமார் 3,420,000 புதிய கோழிக் குஞ்சுகள் தற்போது கோழிப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலும், அந்தக் கோழிகள் டிசம்பர் மாதத்திற்குள் முட்டையிடும் பருவத்திற்கு வளர்ந்துவிடும். எனவே எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர், இந்த நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என குறித்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்துறையினருக்கு வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் எமது மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
இடைக் கால, கால்நடை அபிவிருத்தித் திட்டத்தின் படி, வட மாகாணத்தில் கால்நடை வளத்தை மேம்படுத்தும் பணிகளை வலுவூட்டுவதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 37 மில்லியன் ரூபாவாகும்.
சிறிய மற்றும் நடுத்தரக் கோழிப் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு நாள் வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்குதல், கிராமப்புறங்களில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் போசாக்கை அதிகரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 48 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக, உள்நாட்டுக் கோழி இறைச்சி உற்பத்தி 30% சதவீதத்தினால் குறைந்துள்ளது.
ஆனால், தற்போது பிராய்லர் கோழிக் குஞ்சுகள் அதிக அளவில் பண்ணைகளுக்கு சேர்க்கப்படுவதால், இந்த ஆண்டு இறுதிக்குள், நம் நாட்டின் கோழி இறைச்சி உற்பத்தி, முந்தைய நிலைக்கு திரும்பலாம் என, குறித்த தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது.
நாட்டில் கால்நடை அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னுரிமைப் பணியாகக் கருதி, அவற்றைத் துரிதப்படுத்த கமத்தொழில் அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் கீழ், சிறிய மற்றும் நடுத்தரப் பண்ணைகளின் அபிவிருத்தியை ஊக்குவித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், இறைச்சி மற்றும் முட்டை ஏற்றுமதியை ஊக்குவித்தல், உயர்தர கன்றுகளை இறக்குமதி செய்தல், புற்தரைகளைப் பாதுகாத்தலும் அபிவிருத்தி செய்தலும், கால்நடைத் தீவன உற்பத்தியை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நோய்த் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் முட்டை உற்பத்தியும் 50% சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. கால்நடைத் தீவன உற்பத்தி குறைவு, கால்நடைத் தீவன இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி இல்லாமை, உள்நாட்டு சோள உற்பத்தி குறைவு போன்றவையே இந்த உள்நாட்டு முட்டை உற்பத்திக் குறைவுக்கு முக்கியக் காரணங்களாகும்.
ஆனாலும் தற்போது சோள இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் காரணமாக, கோழிப்பண்ணைகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும், அடுத்த 03 மாதங்களில் முட்டை உற்பத்தியை முன்னர் இருந்த நிலைக்கு உயர்த்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்காக குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், 2023 முதல் 2028 வரையிலான ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று தேசிய பால் உற்பத்திக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பால் பண்ணைகளை முகாமைத்துவம் செய்வதன் ஊடாக உற்பத்தித்திறனை மேம்படுத்தல், புற்தரைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிக போசாக்குள்ள புல் வகைகளைப் பயிரிடுதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச கால்நடைப் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதுடன், இந்தத் தொழில் துறையின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்புகளை வழங்கும் தனியார் கால்நடைப் பண்ணைகளை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அதிகளவில் பால் தரக்கூடிய கறவை மாட்டினங்களைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்யவும், நமது நாட்டு சூழலுக்கு ஏற்ற கறவை மாடுகளை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கு இணையாக எமது நாட்டுக்குத் தேவைக்கான ஆட்டுப் பால் உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றோம்.” என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.