அஸவெசும அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குரிய பணிகளில் இருந்து விலகியிருக்கும் தம்மை பலவந்தமாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்தால், தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை சுதந்திர கிராமசேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மற்ற அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய, தங்கள் சங்கத்தின் அதிகாரிகள் கட்டுப்பட மாட்டார்கள் என அதன் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால் குறிப்பிட்டுள்ளார்.
அஸவெசும அபிவிருத்தித் திட்டத்தின் கடமைகளுக்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இவ்வாறான அழுத்தங்கள் தொடருமானால், வழமையான கடமைகளில் இருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை சுதந்திர கிராம சேவை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, சமுர்த்தி இயக்கத்தின் நிதியை கையாள்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாமர மத்தும களுகே தெரிவித்துள்ளார்.