பிஸ்கட் பாக்கெட்டில் விளம்பரம் செய்ததை காட்டிலும் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்த காரணத்தினால், பிரபல நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்தேறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சென்னை சேர்ந்த டெல்லி பாபு என்பவர், தெரு நாய்களுக்கு உணவிடுவதற்காக பிஸ்கட் பாக்கெட் ஒன்றினை வாங்கிய போது, அதில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்தது தெரியவந்தது.
பிஸ்கட் கவரின் மீது, 16 பிஸ்கட்கள் உள்ளே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், வெறும் 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்தது. இதனையடுத்து பிஸ்கட் வாங்கப்பட்ட அருகாமையில் உள்ள கடைக்கு சென்று அது குறித்து விசாரித்தார்.
ஒரு பிஸ்கட் குறைவு – ஏமாற்றியதாக முறைப்பாடு
அங்கே உரிய பதில் கிடைக்காத நிலையில், நேராக ஐடிசி நிறுவனத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்தபோதும் அங்கும் திருப்தியான விளக்கம் அவருக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் டெல்லி பாபு வழக்கு தொடுத்தார். ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா என்ற நிலையில், தனக்கு இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் புகார் கூறினார். ஐடிசி நிறுவனம் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிப்பதாகவும், அந்த வகையில் நாள் ஒன்றுக்கு ரூ.29 லட்சம் அளவுக்கு வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக ஐடிசி நிறுவனம் வாதாடிய போது, பிஸ்கட் பாக்கெட் எடையின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது தவிர, எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல என கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்தின் பாக்கெட் 76 கிராம் எடை கொண்டது என்றும் தெரிவித்தனர்.
எடை குறைவான பிஸ்கட்டுகளை திரும்ப பெற உத்தரவு
ஆனால் ஒவ்வொரு பாக்கெட்டும் தலா 74 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளதாக இருக்கிறது என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
எனினும் , முன் தயாரிப்பு அடிப்படையில் பேக்கிங் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் 4.5 கிராம் அளவுக்கு எடை வித்தியாசம் இருக்கலாம் என்று 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாக ஐடிசி நிறுவனம் வாதாடியது.
இருப்பினும் நிலையற்ற பொருட்களைக் கொண்ட பாக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் என்றும், பேக்கிங் செய்யப்பட்ட பிறகு பிஸ்கட்டின் எடை குறையாது என்பதால் இந்த விதி ஐடிசி நிறுவனத்திற்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அதே சமயம் பிஸ்கட் பாக்கெட் கவர்மேல் 16 பிஸ்கட்கள் இருப்பதாக தவறான விளம்பரத்தை ஐடிசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதை அடுத்து வாடிக்கையாளர் டெல்லி பாபுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டடன் ம் எடை குறைவான பிஸ்கட்டுகளை விற்பனையில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.