பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி பெண் ஒருவா், அவரது கணவா் மற்றும் கணவரின் 2 சகோதரா்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டதாக பொலிஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
லாகூரிலிருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தின் ராஜன்பூா் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அல்கானி பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த 20 வயதுடைய அந்தப் பெண், திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, அவரது கணவா் மற்றும் கணவரின் 2 சகோதரா்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாா்.
கொல்லப்படுவதற்கு முன்பு அப்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தியதும் பொலிஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் சம்பவத்துக்குப் பின் தப்பியோடிய மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமாா் 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆணவக் கொலை செய்யப்படுவதாக மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.