நெற் செய்கையாளர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் நெல் ஆலைகளை வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன், 2023 சிறுபோகத்தில் நெல் அறுவடைகளை கொள்வனவு செய்வதற்காக சிறிய மற்றும் நடுத்தரளவு நெல் ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் ஈட்டுக் கடன்களை வழங்கும் திட்டமொன்று (Pledge Loan Scheme) செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், அதிகபட்சம் தினசரி 25 மெட்றிக் தொன் அல்லது அதற்கும் குறைவான நெல் அரைக்கும் கொள்ளளவினையும், செல்லுபடியாகும் வணிகப்பதிவினையும் கொண்ட நெல் ஆலை உரிமையாளர்களால் இத்திட்டத்தின் கீழ் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். நெல் ஆலை உரிமையாளரொருவர் ஆண்டுக்கு 16% வட்டி வீதத்தில் அதிகபட்சம் ரூபா 50 மில்லியன் தொகையை கடனாக பெறலாம். இவ்வட்டி வீதத்தில் 12% நெல் ஆலை உரிமையாளர்களால் ஏற்கப்பட வேண்டியதோடு, மிகுதி 4% வட்டி மானியமாக வழங்கப்படும்.
இக்கடன்கள் 180 நாட்களுக்குள் மீளச்செலுத்தித் தீர்க்கப்பட வேண்டும். மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி மூலம் வழங்கப்படவுள்ள இக்கடன்களின் மொத்த பெறுமதி ரூபா 4,000 மில்லியன் ஆகும்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்ட இச்சலுகைக் கடன் திட்டம் இவ்வருடத்தின்செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.