1980 களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி, போக்குவரத்து, துறை முகம், கப்பற்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
திருகோணமலை விமானப்படை தளத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் மகாவலி காணிகளை முகாமைத் துவம் செய்வது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், 2019-2023 காலப்பகுதியில் அந்தக் காணிகளை வழங்குதல் குறித்து அறிக்கையொன்றை தமக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
அபிவிருத்திச் செயன்முறையில் காணிகள் முதன்மையான காரணியாகும் எனவும், அதில் சரியான முகாமைத்துவத்துடன் பேணப்படாவிட்டால், எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், போட்டிபோட்டுக்கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துமாறும், எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும்போது, ஆளுனர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இன்று இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. தற்போது திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை சர்பானா ஜூரோன் நிறுவனம் தயாரித்துள்ளது.
அந்தத் திட்டத்தினை அடிப்படையாகக்கொண்டு திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அந்த அபிவிருத்தித் திட்டத்தின் பிரகாரம் வெருகல் முதல் பானம, குமன கடற்கரையை அபிவிருத்தி செய்வதற்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கடற்கரையை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் எதிபார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், இந்தப் பகுதியில் நவீன விவசாயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் மகாவலி அதிகாரசபை மற்றும் காணித் திணைக்களத்தையும் இதற்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தின் கடற்றொழில், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஏற்படும் இந்த புதிய முன்னேற்றத்துடன் திருகோணமலை நகரத்தை ஒரு முக்கிய வர்த்தக நகரமாக மாற்ற வேண்டும். திருகோணமலைக்குப் பின்னர் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இந்த அபிவிருத்தியைக் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.
குறிப்பாக காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து நாம் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதன்போது, மகாவலி காணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, அவற்றை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது குறித்தும் கண்டறியப்பட வேண்டும்.
அத்துடன் திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தின் அமுலாக்கத்தில், மகாவலி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 1985 திட்டத்தின் பிரகாரம் இருக்கக்கூடிய காணிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் சில காணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அதிகளவான காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எனவே, போட்டி போட்டுக் கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும். அதன்போது மாகாணத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி சரியான முடிவை எட்டுவது மிகவும் முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.
1985 ஆம் ஆண்டு, மகாவலி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, எடின்பரோ பிரபு இங்கு வருகை தந்து வழங்கிய காணிகள், தற்போது வன ஜீவராசிகள் அமைச்சினால் காடுகளாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் வனப்பரப்பு 32 வீதமாக பேணப்பட வேண்டும். அந்த நிலையில் ஏனைய காணிகள் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.இன்று சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அதிகளவு காணிகளைப் பயன்படுத்தியுள்ளன.
அண்மையில் நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது அந்நாட்டு அரசாங்கம் இலங்கையிடம் அரிசியைக் கோரியது. கடந்த ஆண்டு நாம் அவர்களிடம் அரிசியைக் கேட்டதுபோன்று, இந்த ஆண்டு எங்களிடம் அவர்கள் அரிசி கேட்கிறார்கள். எனவே, நாட்டில் நவீன விவசாயத்தை உருவாக்கி, விவசாய உற்பத்திகள் மூலம் உலகப் பொருளாதாரத்தை வெல்வதற்கு நாம் செயற்பட வேண்டும்.
திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு நாம் முயற்சிப்போம். அதற்கு அரச அதிகாரிகள் உட்பட அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விமானப்படை தளபதி வைஸ் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் மாகாண அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.