கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்காக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை குறைக்க எதிர்காலத்தில் வாகனங்களை ஓட்டும் போது வெளிப்படும் புகையினை அளவிடும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு காற்று மாசுபாடு நிலவுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகை இதற்கு 60 முதல் 70 சதவீதம் வரை பங்களிக்கிறது. வீதியில் அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனம் இருந்தால், பொதுமக்கள் அதன் புகைப்படத்தை எங்களுக்கு வாட்ஸ்அப் செய்யலாம். மேலும், இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் ஒன்றிணைத்து வாட்ஸ்அப் குரூப் உருவாக்குகிறோம். இதன் ஊடாக வீதியில் பயணிக்கும் எந்தவொரு வாகனத்தின் இலக்கத்தகடு மாத்திரம் போதும். தடை உத்தரவினை பெற்று அது போன்ற வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையெனில் இதை கட்டுப்படுத்துவது கடினம். எதிர்காலத்தில், விசாரணை நடவடிக்கைகளையும் மேம்படுத்துவோம்.” என்றார்