நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு 46,904.54 ஏக்கராக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்ச்செய்கை வயல்கள் தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தற்போதைய நிலையில் மதிப்பீடு செய்து வருகிறது.
அதன்படி நேற்றைய தினம் (21) வரையில் ஏற்பட்ட பயிர் சேதத்தின் அளவு குறித்த நாளாந்த அறிக்கையை இன்று (22) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் சபை வழங்கியுள்ளது.
அதன்படி, நேற்றைய (21) நிலவரப்படி சேதமடைந்த நெற்பயிர்களின் அளவு 46,904.54 ஏக்கராகும்.
மேலும், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆகும்.
நேற்றைய (21) நிலவரப்படி குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் அளவு 23,286 ஏக்கர் ஆகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,904 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உடவளவை வலயத்தில் பயிர்ச் சேதம் பதிவாகியுள்ள நிலையில், 14,667.5 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5867எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசிடம் தற்போது நெல் மற்றும் அரிசிக்கான கையிருப்பு இல்லாததாலும், தனியார் வசம் அதிகளவு அரிசி இருப்பு இருப்பதாலும், அரிசியின் விலை எதிர்வரும் காலங்களில் உயர வாய்ப்புள்ளதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
அரிசியின் விலை உயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நுகர்வோருக்கு அறிவிக்க அமைச்சரவை நடவடிக்கை எடுக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.