யாழ்ப்பாணம் உடுத்துறைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 43 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தொடர்ச்சியாக விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு கடற்படையினர் யாழ்ப்பாணம் வெத்திலகேணிஇ உடுத்துறைக்கு அண்மித்த கடல் பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் இதன் போதே படகொன்றில் இருந்து குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 130 கிலோ 600 கிராம் (ஈரமான நிலையில்) கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் அவை 61 சிறு பொதிகளாக பொதி செய்யப்பட்டு 03 சாக்குகளில் அடைக்கப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கஞ்சாவினை கடத்துவதற்கு முயன்ற சந்தேக நபர் ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடையவர் என்றும் அவர் யாழ்ப்பாணம்இ உடுத்துறையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 43 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.