யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வலிகாமம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் மாணவனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காதினால் நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர் மாணவனை விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து, நடந்த சம்பவத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியமையை உறுதி செய்துள்ளனர்.
அந்தவகையில் வைத்தியசாலை பிரிவு பொலிஸார் இது தொடர்பில் மாணவனிடம் வாக்குமூலம் பெற்று அதனை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
பாடசாலை நிர்வாகத்தினர் குறித்த விடயத்தினை வெளியே கசிய விடாமல் மூடி மறைக்க முயற்சிப்பதாக அறியமுடிகிறது.
மேலும் மாணவர்களை ஆசிரியர் தாக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து உள்ள நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை.