உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஜுன் மாதம் ஜெலென்ஸ்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மைக்கொலாய்வ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்வது குறித்த விடயங்களை பெற்றுக்கொள்வதற்கு முயன்ற பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.மொஸ்கோ இராணுவத்திற்கு உதவும் உக்ரைன் பிரஜைகளை உக்ரைன் கைதுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தன்னை கொல்வதற்கான சதி குறித்து அதிகாரிகள் தகவல்வழங்கியுள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கைது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யா இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ரஸ்ய தரப்பிடம் தகவல்களை வழங்க முற்பட்டவேளை இந்த பெண் பிடிபட்டார் என உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் அவரது விஜயம் குறித்த தகவல்களை அந்த பெண் பெற முயன்றார் என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் சமயல்அறையில் அந்த பெண் உக்ரைன் அதிகாரிகளுடன் காணப்படும் படத்தை வெளியிட்டுள்ளனர்.
ஜெலென்ஸ்கி குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் தங்களிற்கு இந்த சதி குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் இதனை தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்ளும் பகுதி மீது பாரிய விமானதாக்குதல்களை மேற்கொள்ள ரஸ்யா திட்டமிட்டது,சந்தேகநபர் அந்த பகுதியில் காணப்படும் இலத்திரனியல் பொறிமுறை அமைப்புகள் வெடிமருந்து கிடங்குகள் போன்றவை குறித்த தகவல்களை வழங்க முயன்றார் – ரஸ்யா அவற்றை இலக்குவைப்பதற்கு உதவுவதே அவரின் நோக்கம் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.