எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum) இலங்கை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
காலநிலை நீதியை உறுதிப்படுத்துதல், இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதை துரிதப்படுத்துவதற்கு பாரம்பரியமற்ற மாற்று அணுகுமுறையை பேணும் பொதுவான நோக்கத்துடன், காலநிலை நியாய மன்றம் (Climate Justice Forum) ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைகளுக்கு முன்னுரிமை அளித்து கலந்துரையாட அரசாங்கங்கள், அரசாங்கங்களுக்கிடையேயான நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினர்களுக்கு தளத்தை வழங்கும் ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஐந்தாவது மன்றத்தை 2023 ஒக்டோபர் 03 முதல் 06 வரை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்துடன் இணைந்து சுற்றாடல் அமைச்சு, இதனை ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நஸீர் அஹமட்,
தம்புள்ளை மற்றும் ஹிரிவடுன்ன ஆகியவற்றை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆனது நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் (GSMB), கனிம போக்குவரத்தை முறைமைப்படுத்தும் இலக்குடன், வாகன எண் மற்றும் வழித்தட விவரங்களுடன் கனிமப் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் கணினியில் உருவாக்கப்பட்டவை என்றும், இது அனுமதி பெற்றவரால் விவரங்கள் மாற்றப்படுவதைத் தடுக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கனிமப்பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களை புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் (GSMB), தரவுத்தளக் கட்டமைப்பு மூலம் தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் நடைமுறையையும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
சுரங்கங்கள் மற்றும் கனிமச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை திருத்தம் செய்யப்பட்டு, ஆய்வு அனுமதி நடைமுறைக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள கனிம வளங்களில் முதலீட்டாளர்கள் நேரடியாக, தரகர்களின் தலையீடு இல்லாமல் முதலீடு செய்வதற்கு வசதியாக மேலும் புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த முயற்சியை வெற்றியடையச் செய்வதற்காக, காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum) நிறுவுவதற்கான ஆதரவாளராக சுற்றாடல் அமைச்சு முன்வைத்த மூலோபாய திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய காலநிலை மாற்றக் கொள்கையை உருவாக்குதல் (formulation of a national climatic change policy), தேசிய கனிமக் கொள்கையை உருவாக்குதல் (formulation of a national mineral policy), இலங்கைக்கான தேசிய குளிரூட்டும் கொள்கையை உருவாக்குதல் (formulation of a national cooling policy for Sri Lanka) போன்ற பல்வேறு கொள்கைகளை தயாரிக்கும் பணி, இந்த ஆண்டு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளாகும்.
கழிவு முகாமைத்துவத்தின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சிக்கும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஏற்கனவே விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) விதிகளை இதில் இணைத்துள்ளது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.