ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வ கட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வ கட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தமிழ் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று நடைபெறும் சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
சர்வ கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முன்னர் அரசாங்கத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேநேரம் சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தமது கட்சியின் கருத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளை ஜனாதிபதி உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.