கொழும்பில் நடைபெற்ற 8 நாடுகளுக்கு இடையிலான வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி சம்பியனானது.
ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை 128 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பாகிஸ்தான் ஏ அணி சம்பியனானது.
தய்யப் தாஹர் குவித்த அதிரடி சதம், சாய்ம் அயூப், சாஹிப்ஸாடா பர்ஹான் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பாகிஸ்தான் ஏ அணியின் வெற்றிக்கு வித்திட்டன.
இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற இந்தியா ஏ அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது அதன் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களைக் குவித்தது.
சாய்ம் அயூப், சாஹிப்ஸாடா பர்ஹான் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 104 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
சாய்ம் அயூப் 59 ஓட்டங்களுடனும் சாஹிப்ஸாடா பர்ஹான் 65 ஓட்டங்களுடனும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து 27 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் ஏ அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 183 ஒட்டங்களைப் பெற்று பலம்வாய்ந்த நிலையில் இருந்தது. எனினும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் சரிந்ததால் பாகிஸ்தான் ஏ அணி சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஓமைர் யூசுப் (35), கசிம் அக்ரம் (0), அணித் தலைவர் மொஹமத் ஹரிஸ் (2) ஆகியோர் ஆட்டம் இழக்க இந்திய அணியினர் அளவிலா ஆனந்தம் அடைந்தனர்.
ஆனால், தய்யப் தாஹிர், முபாசிர் கான் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
தய்யப் தாஹிர் 71 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைக் குவித்தார்.
முபாசிர் கான் 35 ஓட்டங்களையும் மொஹமத் வசிம் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா ஏ அணி சார்பாக பந்துவீச்சில் 7 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவரகளில் ரியான் பரக் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஜ்வர்தன் ஹங்கார்கேகார் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 353 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா ஏ அணி 40 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சாய் சுதர்ஷனும் அபிஷேக் ஷர்மாவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சாய் சுதர்ஷன் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் புகுந்த நிக்கின் ஜொசே 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். (80 – 2 விக்.)
20ஆவது ஓவரில் இந்தியா ஏ அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், ஒரு புறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து இந்தியா ஏ அணியின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.
அவரை விட அணித் தலைவர் யாஷ் துல் ஒரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய மற்றும் பின்வரிசையில் வேறு எவரும் 15 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.
பாகிஸ்தான் ஏ அணி பந்துவீச்சில் சுபியான் முக்கீம் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெஹ்ரான் மும்டாஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷாத் இக்பால் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: தய்யப் தாஹிர்,
தொடர்நாயகன்: நிஷாந்த் சிந்து (11 விக்கெட்கள்)