பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த காரில் இருந்த 5 பேரை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவத்தகம நகரில் ஜூலை 18 ஆம் திகதி இரவு போக்குவரத்து பொலிஸார் சந்தேகத்திற்கிடமான காரொன்றை சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சமிக்ஞை செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர், குறித்த கார் பொலிஸாரின் ஆணையை மீறி குருநாகல் நோக்கி தப்பிச் சென்றது.
அப்போது, பொலிசார் வாகனத்தை துரத்திச் சென்று நிறுத்தியபோது, சாரதி குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
எனினும், அப்போது காரில் இருந்த நான்கு பேர் தப்பிச் சென்றதையடுத்து, காரை சோதனையிட்டதில் வாள்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4 வாள்கள், 9 மின்சார டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சி, 3 டிரில் இயந்திரங்கள், 1 கிலோ 300 கிராம் எமோனியா மற்றும் தோண்டும் உபகரணங்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சாரதி தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று (19) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, குருநாகல் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களையும் கிரிஉல்ல, கொதெனிய மற்றும் மீரிகம பொலிஸ் பிரிவுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37, 39, 40 மற்றும் 45 வயதுடைய அம்பேபுஸ்ஸ, தம்பதெனிய மற்றும் கொட்டதெனிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் 5 பேரும் பிபில பகுதிக்கு சென்று புதையல் பெறுவதற்காக அகழ்வில் ஈடுபட்டு பின்னர் திரும்பி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்களுக்கு வெடிமருந்துகளை வழங்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை போயவலனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்எலிய பகுதியை சேர்ந்த 47 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.