பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையில், உயிரிழந்த யுவதிக்கு எந்தவிதமான அளவுக்கதிகமான மருந்தோ அல்லது தவறான மருந்தோ வழங்கப்படவில்லை என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
பெற்றோரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில், விளக்கமளிக்கும் போதே பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டொக்டர் அர்ஜூன மேலும் தெரிவிக்கையில்,
நோயாளிக்கு வழங்கப்படும் ஆன்டிபயோடிக் செஃப்ட்ரியாக்ஸோன், பேராதனை போதனா வைத்தியசாலை உட்பட இலங்கையின் அனைத்து வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்படும் மருந்து. கடந்த காலங்களில் நோயாளர்களுக்கு 2700 தடுப்பூசி குப்பிகள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்களுக்கு அந்த வகையைச் சேர்ந்த இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தினால் மரணம் நிகழ்ந்தது என்பதில் உண்மையில்லை. இது மிகவும் அரிதான ஒவ்வாமை அதிர்ச்சியினால் ஏற்பட்ட மரணம்.
யுவதியின் இரத்தம், திசுக்கள் மற்றும் உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை அறிக்கைகள் வரும் வரை எதுவும் கூற முடியாது.
நோயாளிக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியின் அளவை ஒரே நேரத்தில் வழங்கக்கூடிய ஊசிகள் இல்லாததால், அதற்குரிய டோஸ் இரண்டு முறை வழங்கப்பட்டதாகவும், அது நோயாளிக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.